THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தமிழர் வரலாறு அங்கம் 5

காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்

பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்
இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ். ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத் தேர்தலிலும் படித்த கண்டிச் சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.

சட்டவாக்கு அவையில் உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக 1922 – 1924 வரை பணியாற்றியவர்.

1924 ஆம் ஆண்டு ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டு வலிகாமம் வடக்குத் தொகுதியில் இராமநாதன் போட்டியிட்டு வென்றார். இந்தப் பதவியில் அவர் இறக்கும் வரையில் (நொவெம்பர் 26, 1930) தொடர்ந்து இருந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு அகவை எண்பது ஆகும்.

அதாவது 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இராமநாதனின் ஆளுமைக்குட்பட்ட அரசியல் இலங்கையில் கோலோச்சியது என்றால் அது மிகையல்ல.

பொன். இராமநாதன் ஆண், பெண் இருபாலாருக்கும் தாய்மொழியில் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என வாதாடியவர். அதே போல் கட்டாய சமயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடியவர்.

நான் முன்னர் குறிப்பிட்டது போல இராமநாதன் யாழ்ப்பாணக் குடாநாட்டு சைவசமய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இமாலய சாதனையாக இரண்டு கல்லூரிகளைக் கட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் மகளிர் படிப்பதற்கு 1913 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரியையும் எட்டு ஆண்டுகள் கழித்து இளைஞர் படிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியையும் நிறுவியவர்.

சிங்கள மக்கள் தமது இனவுணர்வு. மொழியுணர்வு அற்ற நிலையில் தம் தனித்துவத்தை இழக்கும் ஆபத்திற்குள்ளாகி இருந்த போது “lf Sinhala lips will not speak the Sinhala Language who else there to speak it” (சிங்களவர்கள் சிங்களத்தைப் போசாதுவிடின் வேறு யார் சிங்களத்தை பேசவர்;) என்று 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் ஆனந்தா கல்லூரியில் இராமநாதன் பேசிய பேச்சுத்தான் சிங்களவர்களை இனவுணர்வும். மொழியுணர்வும் கொள்ளச் செய்தது.

1915 சிங்கள ,- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. படைத்துறைச் சட்டத்தை (Martial Law) பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர். சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். .இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறையைக் கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்ச் சு10ழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று பிரதமருடனும் மற்ற அமைச்சர்களுடனும் பேசிக் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் பிறப்பித்த படைத்துறைச் சட்டம் (Martial Law) திரும்பப் பெறப்பட்டது. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் திருப்பி அழைக்க வைத்தார்.

வெற்றியோடு இராமநாதன் இலங்கை திரும்பினார். அவரை வரவேற்பதற்கு சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் கொழும்புத் துறைமுகத்தில் கால் கடுக்கக் காத்திருந்தனர். இராமநாதனை அழைத்துப் போக குதிரைகள் பூட்டிய தேர் காத்திருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட சிங்களவர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு இராமநாதனைத் தேரில் வைத்து தாமே குதிரைகளாக மாறி காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் இருந்த அவரது சுகஸ்தான் மாளிகை வரை இழுத்து வந்தனர்.

"எமது நெருக்கடியான கால கட்டத்தில் வடக்கிலிருந்து வந்த இவ்வீர மகன் எமக்குத் துணை போகாது விட்டிருந்தால் சிங்கள இனமே பூண்டோடு அழிந்திருக்கும்" என்று சிங்களத் தலைவர்கள் பாமாலை பாடி புகழ்மாலை பாடினார்கள்.

இந்தக் காட்சி ஓவியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப மேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு அருங்காட்சியம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

சிங்களவர் – முஸ்லிம் கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும் படைத்துறைச் சட்டமும்" என்ற நூலையும் எழுதினார்.

1915 இல் தூக்குக் கயிற்றில் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றிய இராமநாதனைப் பாராட்டு முகமாக அவருக்கு ஒரு சிலை எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இச்சிலை செதுக்கப்பட்ட போதும் அது எழுப்பப்படவில்லை. அது ஒரு பண்டகசாலையில் தேடுவாரற்றுக் கிடந்தது.

பவுத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறை நாள் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்தார்.

இதே இராமநாதன் 1919 இல் தன் தம்பி சேர். பொன். அருணாசலம் தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தன்னிடம் வாழ்த்துப்பெற வந்தபோது “தம்பி முன்னேறு. ஆனால் உன் நாற்காலியிலிருந்து நீ தூக்கி எறியப்படும் ஆபத்து உண்டு” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை வீண்போகவில்லை.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஒரு அரசியல்வாதி படியாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுப்பதைக் கடைசிவரை கடுமையாக எதிர்த்தது வியப்பை அளிக்கிறது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளித்தால் பெரும்பான்மை சிங்களவர்களது கைகளுக்கு ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக அதனை எதிர்த்தார் என்பதற்கு "டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை. நாங்கள் அதிகாரத்தை ஒரு பண்பில்லாத கும்பலிடம் கையளிகப் போகிறோம். போதிய பாதுகாப்பின்றி நாம் இந்த அரசியல் யாப்பை ஏற்போமானால் தமிழர்களுக்கு அது ஒரு சாவுமணியோசையாக இருக்கும்" என்ற வாக்கியத்தை விட வேறு வலுவான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இராமநாதன் இவ்வாறு எச்சரித்ததை "கிழவனின் பிதற்றல்" என சிங்களவத் தலைவர்கள் எள்ளி நகையாடினர். தமிழ்த் தலைவர்கள் பலர் இவரின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "முத்தி நெறி அறியாத மூர்கரோடு முயல்வேனை" என்ற திருவாசகப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

1919 ஆண்டுக்குப் பின்னர் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இராமநாதன் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்களுக்குச் சார்பாக அமைந்திருந்தன என்று கருதப்பட்டது. குறிப்பாக வகுப்புவாத பிரதிநித்துவ அடிப்படையை நீக்கி ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடைபெறும் போது சிறுபான்மையினரைக் - குறிப்பாகத் தமிழரை அது பாதிக்கும் - என்று இராமநாதன் வாதிட்டது சிங்கள – பவுத்த தலைவர்களது கோபத்துக்கும் வெறுப்புக்கும் அவரை உள்ளாக்கியது. இந்த நிலையில் அவரின் சிலையைக் கடலில் தூக்கியயெறியத் சில சிங்களத் தலைவர்கள் சதி செய்தனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற புகழைத் தட்டிக்கொண்ட டி.எஸ். சேனநாயக்கா இராமநாதனின் இறுதிக்காலத்தில் அவரோடு பல விடயங்களில் மாறுபட்டிருந்தார். எனினும் அவர் மறைந்த போது எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த இலங்கையர் (The Greatest Ceylonese of all time) என்று கூறினார். பெரும்பாலும் இது வஞ்சகப் புகழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்களை நம்பவைத்து கழுத்து அறுத்ததில் அதிலும் நோவாமல் அறுத்ததில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்த டி.எஸ். சேனநாயக்காவை யாரும் விஞ்சமுடியாது.

தனது அமைச்சரவையில் அருணாசலம் மகாதேவா, பேராசிரியர் சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வைத்துக்கொண்டுதான் கிழக்கில் பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றங்களை மும்மரமாகச் செய்து முடித்தார். அதற்கு அப்போது சொல்லப்பட்ட காரணம் தெற்கில் நெருக்கமாக வாழும் சிங்களவர்களுக்குப் புதிய நீர்ப்பாசன திட்டங்களில் காணிகள் கொடுத்து குடியமர்த்தப் படுகிறார்கள் என்பதே.

இராமநாதன் இறந்த மறுநாள் இலங்கை Daily News செய்தித்தாளில் வெளிவந்த ஆசிரிய தலையங்கம் "இராமநாதன் இலங்கையின் மிகவும் ஆளுமைபடைத்த தலைவர்" என வருணித்தது. இலண்டனில் இருந்து வெளியாகும் Times of London செய்தித்தாள் இராமநாதனை "நவீன இலங்கையின் நிறுவனர்" (Founder of modern Ceylon) என எழுதியது.

இலங்கையின் வரலாற்றில் இராமநாதனைப் போல் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சிங்களவர்கள் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு. பேராசிரியர் சி. சுந்தரலிங்கம், வி. நல்லையா, சு.நடேசன், ஜி.ஜி. பொன்னம்பலம், கந்தையா வைத்தியநாதன், செல்லையா குமாரசூரியர், இலட்சுமன் கதிர்காமர் போன்றோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டம், பதவிகளுக்குப் பலியான சுந்தரலிங்கம் பிற்காலத்தில் கழிவிரக்கப்பட்டார். மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது.

பேராசிரியர் சுந்தரலிங்கம் டி.எஸ். சேனநாயக்கா, யோன் கொத்தலாவெலா போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கு நீண்டகாலமாக ஆலோசகராக இருந்தவர். டிசெம்பர் 10, 1948 இல் இந்திய குடியானவர்களது குடியுரிமைச் சட்டம் இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பேராசிரியர் சுந்தரலிங்கம் அதற்கு எதிராக வாக்களித்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவரிடம் விளக்கம் கேட்ட போது விளக்கம் கொடுக்க மறுத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் தனது அமைச்சர் ( ஆinளைவநச ழக வுசயனந யனெ ஊழஅஅநசஉந ) பதவியைத் துறந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு (மே 14, 1976) 17 ஆண்டுகளுக்கு முன்னரே 1959 இல் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

50:50 கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் செப்தெம்பர் 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் மீன்பிடி அமைச்சராகச் சேர்ந்து கொண்டார். அதன் மூலம் இலங்கை இந்திய காங்கிரசோடு மலையகத் தமிழர்களது குடியுரிமைக்குப் பாடுபடுவேன் எனப் பொன்னம்பலம் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். 1953 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற சேர் யோன் கொத்தலாவெலா பொன்னம்பலத்தை அமைச்சரiவியல் இருந்து வெளியேற்றி அவமானப்படுத்தினார்.

டி.எஸ். சேனநாயக்கா 1953 காலமான போது அடுத்த பிரதமராக மூப்பு அடிப்படையில் சேர். யோன் கொத்தலாவலா பிரதமராக வந்திருக்க வேண்டும். ஆனால் டட்லி செனநாயக்கா இலங்கையின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்பதற்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் பாடுபட்டார் என்ற கோபம் காரணமாகவே அவர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

செல்லையா குமாரசூரியர் திருமதி பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் (1970 – 1977) அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பின் அவர் தேடுவாரற்றுக் காணாமல் போய்விட்டார்.

சந்திரிகா குமாரதுங்கா அமைச்சரவையில் இலட்சுமன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால் பிரதமர் பதவி வெற்றிடமாக வந்த போது அவர் தமிழர் என்ற காரணத்துக்காகக் கழட்டிவிடப்பட்டார்.

1915 இல் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அடுத்த கிழமை சற்று விரிவாக எழுதுவேன். (வளரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக