பிரபாகரனின் தந்தையின் பூதவுடலை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் இலங்கை அரசு : துணை போகிறாரா சிவாஜிலிங்கம்?
[ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 07:14.48 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாரனின் தந்தையான மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை வைத்து, இலங்கை அரசாங்கம் அரசியல் நடத்த முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது பூதவுடல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திடம் அரசாங்கத்தினால் கையளிக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியாகவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்ற ஊகம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உலவி வருகிறது.
இதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக மேற்கொண்ட பிரசாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டது.
எனினும் தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் மிகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்ட சிவாஜிலிங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் எந்த ஒரு விசாரணையையும் நடத்தவில்லை.
இந்த நிலையில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக களமிறக்கப்பட்டமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் கிடைக்காத வாக்குகள் பிரிந்து செல்லட்டும் என்ற அடிப்படையிலேயே என ஊகங்கள் எழுந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிரசாரங்களை நடத்திய போது அவருக்கு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்று இருக்கவில்லை.
இந்த நிலையில் பிரபாகரனின் தந்தையாரின் பூதவுடலை வைத்துக் கொண்டு தமக்கு அனுதாபத்தை தேடும் முயற்சியில் சிவாஜிலிங்கம் ஈடுபட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதுவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் விமர்சித்து வரும் அரசாங்கம் திருவேங்கடம் வேலுப்பிள்ளையையும் அவரது மனைவியையும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பனாகொட முகாமில் தடுத்து வைத்திருந்தது.
இந்த நிலையில் எவ்வாறு அவரின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் அரசாங்கம் கையளிக்கும் என்ற கேள்வியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது தந்தையாரின் மரணம் மீண்டும் ஒருமுறை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் செயலாகவே தமிழ் மக்கள் மத்தியில் கருதப்படுகிறது.
அதாவது வயதான காலத்திலும் கூட பிரபாகரனின் பெற்றோரை தடுத்து வைத்திருந்தமை அநீதியான செயல் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
எனவே இந்த பழியில் இருந்து தப்பிக் கொள்வதற்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் கவரும் விதத்திலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுக்கும் நடவடிக்கைக்கு சிவாஜிலிங்கம் துணை போவதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கையை வைத்துக் கொண்டு அரசாங்கம் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் மீதான சந்தேகத்தை இல்லாது ஒழிக்க முயற்சிக்கும் என்றும் கருதப்படுகிறது.
வெள்ளி, 8 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக