மனைவியின் விருப்பப்படி இறுதிக்கிரியை
[ வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2010, 03:02.58 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தையான வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை தனது 86ஆவது வயதில் காலமானார். பனாகொட இராணுவ முகாமில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமாகியதாக தெரிவித்த இராணுவ பேச்சாளர் அவரது இறுதிக்கிரியைகள் மனைவி மற்றும் உறவினர்களின் விருப்பப்படி நடைபெறும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது:-
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த பொதுமக்களுடன் தங்கியிருந்த நிலையில் பிரபாகரனின் பெற்றோர் இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு இவர்கள் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பனாகொட இரழணுவ முகாமில் பாதுகாப்பு சகிதம் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
1924ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி பிறந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தராவார். 1943 ம் ஆண்டு தொடக்கம் 1982 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச காணி உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவரரின் இளைய மகனே பிரபாகரனாவார்.
வன்னி இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவரும் இவரது மனைவியாரும் கடந்த வருடம் ஜூலை மாதம் 2ஆம் திகதி அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே பனாகொட இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இதேவேளை நீண்ட காலமாக பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.
பின்னர் மீண்டும் பனாகொட இராணுவ முகாமிற்கே அழைத்து வரப்பட்ட போதும் நடமாட முடியாத நிலையில் தொடர்ந்தும் படுக்கையிலேயே இருக்கும் வகையில் அவரது உடல் நிலை மோசமடைந்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே அவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை மரணம் எய்தினார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் அவரது மனைவி மற்றும் உறிவினர்களின் விருப்பப்படி நடாத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
வெள்ளி, 8 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக