12000 புலிச் சந்தேக நபர்களின் எதிர்காலம் எதிர்க்கட்சிகள் இடையே பொது இணக்கம்
தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் ஜே.வி.பி. அறிவிப்பு
அரச படைகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் பன்னிரண்டாயிரம் புலிச் சந்தேக நபர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எதிர்காலம் குறித்த விடயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு ஒன்று உள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அநுர குமார திஸ்ஸநாயக்கா நேற்றுப் பகிரங்கமாக அறிவித்தார்.இந்தத் தமிழ் இளைஞர், யுவதிகளுள் குற்றமிழைத்தவர்கள் இருப்பின் அவர்க ளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப் பது தொடர்பிலும், குற்றமிழைக்காதவர்க ளுக்குப் புனர்வாழ்வளித்து, அவர்களை விடுவிப்பது தொடர்பிலும் சரத் பொன் சேகாவை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளி டையே இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார் அவர். கொழும்பு சிலோன் கொன்டினென்டல் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:இந்த நாட்டில் 30 வருடங்களாக இருந்த பயங்கரவாதம் காரணமாக நாடு சீரழிந்து போயிருந்தது; ஜனநாயகம் இல்லாமல் போனது.இப்போது அந்தப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போதிலும் நாட்டில் ஜனநாயகம் மீண்டும் வரவில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை இந்நாட்டில் இருப்பதே அதற்குக் காரணம்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையால் அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை. மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் லலித் வீரதுங்க ஆகியோரே அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கின்றனர். நாடாளுமன்றம் கூட ஒரு மாதத்தில் ஒரு தடவைதான் கூட்டப்படுகின்றது. அரசுக்குத் தேவையாக இருக்கின்ற அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள்வதற்காக மட்டுமே இவ்வாறு கூட்டப்படுகிறது.வடக்கு கிழக்கில் ஜனநாயகம் இல்லாமல் போனால்மஹிந்த ராஜபக்ஷவின் வசம் உள்ள நிறைவேற்று அதிகாரமே இந்தப் போக்குக்குப் பிரதான காரணம். பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கில் ஜனநாயகம் இல்லாது போனால் அங்கு மீண்டும் அசாதாரண நிலை ஏற்படும்.கிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்கள் ஒழித்துக்கட்டப்படாவிட்டால் ஜனநாயகத்தை விரும்பும் அங்குள்ள இளைஞர்களும் ஆயுதம் ஏந்த வேண்டி நேரும். அதேபோல் வடக்கில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழு களையப்படாவிட்டால் அங்குள்ள ஏனைய இளைஞர்களும் அக்குழுவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவர். ஜனநாயகமற்ற சூழ்நிலை தொடர்ந்தும் உருவாகிக்கொண்டு போவதற்கு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையே காரணம்.நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், நாட்டை அபிவிருத்தி செய்தல், அகதிகளை மீள்குடியமர்த்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளுக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 12 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் குற்றச் செயலில் ஈடுபடாதவர்களைப் புனர்வாழ்வளித்து அவர்களை விடுவிப்பது தொடர்பிலும் எமக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. சரத் பொன்சேகா ஜனாதிபதியானதும் மேற்படி விடயங்களை நாம் நடைமுறைப்படுத்துவோம். இந்நாட்டில் நிச்சயம் நம்பிக்கைக்குரிய மாற்றம் ஏற்படும். என்றார் அவர்..
வெள்ளி, 8 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக